உடல் ரீதியான குறைபாடுகள் தமது கல்விக் கனவுகளுக்குத் தடையாக மாறுவதற்கு இடமளிக்காது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சரசவி திரியோ அபிமன்” எனும் விசேட மாணவர் உதவித்தொகை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (11) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் பாராட்டப்படவுள்ளதுடன், ஒரு மாணவருக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா உதவித்தொகையை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“சரசவி திரியோ அபிமன்” ஆரம்ப நிகழ்வில் 236 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டப்படவுள்ளதுடன், இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆகும். கொழும்புக்கு வருகை தரும் போது எதிர்நோக்க வேண்டியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் மாணவர் உதவித்தொகை வழங்கும் போது, உதவித்தொகை பெறும் மாணவர்களின் அருகிலேயே சென்று அதனை வழங்கியமை சிறப்பம்சமாகும்.
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் “சரசவி திரியோ அபிமன்” திட்டமானது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கல்விச் சாதனைகளுக்கு தேசிய அங்கீகாரத்தை வழங்குவதோடு, எந்தவொரு உடல்ரீதியான தடைகளும் கல்விக்கனவுகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் சிறந்த சமூக வலுவூட்டல் திட்டமாகும்.
சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் அரச கொள்கைகளை வகுத்து வருகின்றது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
இன்றைய நாள் நமது நாட்டின் வரலாற்றில், குறிப்பாக ஜனாதிபதி நிதியத்தின் வரலாற்றில் மிகவும் விசேடமான ஒரு நாளாகும். கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் எடுக்கப்பட்ட மற்றுமொரு விசேடமான நடவடிக்கை இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மக்கள்நேய ஜனாதிபதி நிதியத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் மற்றுமொரு வெற்றிகரமான அடி வைக்கப்பட்ட ஒரு நாள் என்றுதான் இதைக் கூற வேண்டும். நமது நாட்டில் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவது எளிதானது அல்ல. அது அனைவருக்கும் கிடைப்பதும் இல்லை.
இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயர்தரத்தில் சித்தியடைந்தாலும், அதனுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகின்றனர்.
இன்று இங்கு இருப்பது பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுகின்ற மிகவும் தைரியமான மற்றும் உறுதியான எண்ணங்கொண்ட பிரஜைகளின் ஒரு குழுவினராகும். நீங்கள் பல சவால்களை வென்று, நாளாந்தம் அந்த சவால்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டே இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு அங்கீகாரத்தை வழங்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உண்மையிலேயே சமூகத்திற்கும், முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாவீர்கள். உங்களது தைரியத்தை நாங்கள் மதிக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் ஒரு அங்கமாகும். சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியவை என்ற அடிப்படையில் எமது அரசாங்கம் கொள்கைகளை வகுத்து வருகின்றது.
அனைத்து பரந்த எல்லைகளையும் நோக்கி, இந்த பன்முகத்தன்மைகளை எமது கல்வி முறைமைக்குள் ஏற்றுக்கொள்கிறோம் என்ற செய்தியை நாம் வழங்க வேண்டும். அந்த பன்முகத்தன்மைகளின் ஊடாக கற்றுக்கொண்டு மிக உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
மாற்றுத்திறனாளி பிள்ளைகளை பல்கலைக்கழக முறைமைக்குள் அனுமதிப்பது பெரும் போராட்டத்திற்கு பின்னரே சாத்தியமானது. தற்போது மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் படிப்பதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவ, மாணவிகள் எவ்வித தடையுமின்றி தமது கல்விப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பிரிவுகள் இருக்க வேண்டும். கல்வி டிஜிட்டல் மயமாக்கல் பணிக்குழு இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்னோடித் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பன்முகத்தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான பொறுப்பு உள்ளது. இது கைவிட முடியாத ஒரு பொறுப்பாகும்.
சமூகத்தின் ஒரு பகுதியை புறக்கணித்துவிட்டு முன்னேறிய சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும், சிறப்புத் தேவையுடைய 236 மாணவ, மாணவிகள் முதற்கட்டத்தின் கீழ் இன்று பாராட்டப்படுகிறார்கள்.
உங்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 23.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கி மேற்கொள்ளப்படும் இந்த உன்னதமான பணியை, அரசாங்கத்தின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உங்களுடன் சேர்ந்து உங்களது பெற்றோர்களுக்கும் எனது கௌரவத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் உங்களுக்காக ஒரு பாரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் இரவும் பகலும் அயராது உழைத்ததை நாங்கள் அறிவோம்.
நீங்கள் பெறும் உயர்கல்வியை நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யக்கூடிய வகையில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அதற்கு அவசியமான தொழில்முறை வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அதிகபட்சமாகச் செயல்படுவோம். நீங்கள் நாட்டிற்கு ஒரு சுமையல்ல. நீங்கள் இந்நாட்டிற்கு ஒரு பெறுமதிமிக்க மனித வளம் ஆகும். நீங்கள் இந்த சமூகத்தின் பங்குதாரர்கள். உங்களுக்குள் இருக்கும் கனவுகள் நனவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
