கலப்பு முறையிலேயே மாகாண தேர்தல்! தனி வழிக்கு தயாராகும் மலையக கட்சிகள்!!

இவ்வருடத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையாக உள்ள விடயங்களை தகர்ப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மறுபுறத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு முக்கியமான பௌத்த தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசுக்கு ஆதரவு வழங்கும் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி தொகுதி (70 வீதம்) மற்றும் விகிதாசாரம் (30 வீதம்) என கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதுவரை மாகாணமொன்றில் கூடுதல் வாக்குகளைப்பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். புதிய யோசனையின் பிரகாரம் மாவட்டமொன்றுக்கு இரு ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அப்படியானால் 6 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதால் அரசியல் கட்சிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தி பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துவருகின்றன. தற்போதைய நிலைவரப்படி மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு முக்கியமான சில கட்சிகள் ஆலோசனை நடத்திவருகின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளே தனிவழிப்பயணத்துக்கு தயாராகிவருகின்றன. எனினும், இறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமை எவ்வாறு அமையும் என்பதை அடிப்படையாகக்கொண்டே மேற்படி கட்சிகளின் இறுதி முடிவு அமையும்.

புதிய தேர்தல் முறையானது சிறு கட்சிகளுக்கு பாதிப்பாக இருக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Paid Ad