குடும்பத் தகராறு முற்றியதில் வீட்டிற்குத் தீ; தந்தை, தாய், மகள் பலி!

குடும்பத் தகராறு முற்றியதில் வீட்டிற்குத் தீ; தந்தை, தாய், மகள் பலி!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற மிகத் துயரமான சம்பவமொன்றில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவனால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் 43 வயதுடைய சமன் அநுருத்த பிரதீப்பிரிய (தீ வைத்தவர்) மற்றும் அவரது 13 வயதுடைய மகள் டிமல்கா ஜயஷானி பிரதீப்பிரிய ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவிக்குத் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகராறுகள் காரணமாக, குறித்த மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் படிகாரமடுவ பகுதியில் உள்ள அவரது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டிற்குள் நுழைந்த கணவர், அங்கிருந்தவர்கள் மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

தீ பரவிய வேளையில் வீட்டினுள் மனைவி, அவரது தாயார் மற்றும் இரு மகள்கள் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருந்த 20 வயதுடைய மகன், தீப்பிழம்புகளுக்கு மத்தியில் தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்றப் போராடியபோது அவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவி பிரபாஷா சந்தமாலி (36), மனைவியின் தாயார் கமலாவதி (66)(ஓய்வுபெற்ற ஆசிரியை), 15 வயதுடைய மூத்த மகள், 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

 

 

Related Articles

Latest Articles