” மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எமக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக கிடைக்கப்பெறவில்லை. சாதாரண ஒப்பந்தமாக அல்லாமல், சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக அது இருக்க வேண்டும். அதேபோல ஒப்பந்தம் முறையாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தொழிற்சங்க போராட்டத்துக்கு நாமும் ஆதரவு வழங்கினோம். இணக்கப்பாடு, இணக்கப்பாடு என தொழிலாளர்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. மேல் மட்டத்தில் உத்தரவுடன்கூடிய உறுதியான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் அவசியம். அதில் பெயருக்கான கொழுந்து அளவு எவ்வளவு என்பது உட்பட அனைத்து விடயங்களும் இருக்க வேண்டும். வெளிப்படை தன்மையுடனான பேச்சு அவசியம்.
அதேபோல இரண்டு வருடங்களாக அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது அந்த நிலுவை கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் கம்பனிகள் முடிவொன்றை எடுக்க வேண்டும். இன்று எட்வான்ஸ் வழங்க இடமளிப்போம். ஆனால் மீண்டும் வீதியில் இறங்குவோம்.” – என்றார்.
- கௌசல்யா –
