“எம்மை நாமே ஆள வேண்டும்!”

“யாமார்க்கும் குடியல்லோம்” எனும் கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் எழுச்சி நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட மே தினப் பிரகடன உரையை நிகழ்த்தினார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இலங்கைத் தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்களிடையே ஏற்படுத்திய நம்பிக்கையைச் சரிவடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலைகளில் இருந்து முற்றிலும் வெளிவர முடியாத ஒரு புதிய அரசே இன்று பதவியில் உள்ளது என்றும் சாடினார். லெனினையும் மார்க்ஸையும் முன்னிறுத்திப் பேசும் இந்த அரசின் புதிய அரசியல் கலாசாரம் என்பது பழைய பந்திக்கே திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன. வளப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அரச திணைக்களங்களினால் ஆக்கிரமிக்கப்படுவதுடன், விளைநிலங்கள் மீது விகாரைகள் அமைக்கப்படுவதும் தொடர்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்தவொரு மாற்றமுமின்றி இன்றும் வீரியமாகவே உள்ளது என்றார்.

“கடல்வள மேலாண்மை அயலக மீனவர்களிடம் அகப்பட்டு கிடப்பதால், எமது மீனவர்கள் சுய பொருளாதாரத்தை அடைய முடியாத நிலை காணப்படுகின்றது.

நிலையான முகாமைத்துவம் இன்றி உற்பத்திச் செலவு மற்றும் விலை ஏற்றம் காரணமாகத் தமிழ் விவசாயிகள் பேரிடரை எதிர்கொள்கின்றனர்.

தினக்கூலிகள் இன்றும் அதே நிலையிலேயே உள்ளனர். நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரம் நலிந்து போயுள்ளது.

எமது ஈழத் தொழிலாளர்களின் மீட்சிக்கு, “எமது நிலம் எமக்கே வேண்டும், எம்மை நாமே ஆள வேண்டும்” என்ற சுயநிருணயக் கோரிக்கையை அடைவதற்கான திடசங்கற்பத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதே இந்தப் பிரகடனத்தின் பிரதான செய்தியாகும்.” – என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles