மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
காவடி ஊர்வலத்தை நிறுத்துமாறு ,புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் மாத்தறை மாவட்டச் செயலாளருக்கு நேற்று பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், அரச அதிபர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ காவடி ஊர்வலத்துடன் நாளை நடைபெறவுள்ள பெரஹர உற்சவத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேவினுவர எசல பெரஹரா ஊர்வலத்தில் பங்கேற்ற 45 காவடியாட்டக் குழுக்களும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவரேனும் குழப்பத்தில் ஈடுபட்டால் ஊர்வலத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். எனவே, பெரஹரவுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாமல், பாரம்பரிய கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அதனை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாளை விசேட பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருக்கும்.” என்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.
