மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடந்து, மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல வருடங்களாக மண்ணெண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமையே பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொண்டுள்ளமைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் தமது தொழிலை கொண்டு நடாத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மீன் விலை அதிகரிக்கலாமென பேலியகொடை மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
