கெலேகால கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி தாழிறங்கும் அபாயம்

நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட கெலேகால கிராமத்திற்கு செல்லும் வீதியில் பாரிய வெடிப்புகளும் குழிகளும் ஏற்பட்டுள்ளதுடன், வீதி தாழ் இறங்கும் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கெலேகால கிராம வீதிக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்காக கடந்த இரண்டு வாரமாக பாரவூர்திகள் மூலம் மண் கொண்டு செல்வதால் வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதை உடைந்து தாழ் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீதியின் அடியில் செல்லும் மாநகர சபையால் விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயும் உடைந்து பாதையில் கசிந்து வருகின்றது.

நுவரெலியா நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கெலேகால கிராமம். நுவரெலியாவின் கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கிராமமாக இது இருக்கின்ற போதிலும் இந்த வீதி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை.

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பத்து வட்டாரங்களிலும் வீதிகள் அனைத்தும் காபட் பாதைகளாக புனரமைக்கப்பட்ட போதிலும் இந்த கெலேகால வீதி மாத்திரம் இதுவரை புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. இது தமிழ், சிங்கள,முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழும் கிராமமாகும்.

கடந்த தேர்தல் காலங்களில் மட்டும் வீதிக்கு காபட் இட்டு தருவதாகவும் இக் கிராமத்தின் குறைகளையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தேர்தலின் பின்னர் இந்த வீதியைப் பற்றி சிந்திப்பதே இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் இக்கிராமம் இருப்பதால் பெருந்தொகையான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். எனவே நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் இவ்வீதி இருப்பதால் பாரவூர்திகள் மண் ஏற்றி செல்வதை தடை செய்ய வேண்டும். உடைந்த வீதியை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தலவாக்கலை நிருபர்

Paid Ad