‘கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு தாருங்கள்’

” வடக்கு மக்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வருகின்றனர். அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.” – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு இன்று (31) விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே
மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சமூகப் பரவலா இல்லையா என்பதை வைத்தியர்கள்தான் தீர்மானிப்பார்கள். நாங்கள் படைத்தரப்பினர். தீர்மானிப்பவர்கள் அல்லர். வைத்தியர்கள் இதுவரை அவ்வாறு கூறவில்லை.

சமூகப்பரவல் என்பது ‘தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும்’. இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூகப்பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா இல்லையா என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனா தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிகஅவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். நாட்டுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் கொரொனாவை கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பினை வழங்கவேண்டும்.

சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக் கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல், மற்றும் சமூக இடைவெளி யினை கடைப்பிடித்தல்ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

வடமாகாண மக்கள் இந்த சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து செயற்படுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகிறோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles