‘கொரோனா’வை ஒழிக்க கடலில்கூட மூழ்குவேன்’ – சுகாதார அமைச்சர் சூளுரை!

“கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சாகதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.1ஆவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதுபோல 2ஆவது அலையையும் கட்டுப்படுத்துவோம்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்தி மக்களை பாதுகாத்தோம். 2 ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் சாதகமாக இடம்பெற்றுவருகின்றன. இலங்கையில் பலமானதொரு சுகாதார கட்டமைப்பு இருப்பதாலேயே சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதனை மேலும் பலப்படுத்தவேண்டும். அதற்கான ஒழுங்குவிதிகளே இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  நான் காலை 8.30 மணிக்கு அமைச்சுக்கு சென்றால், இரவுவரை அங்கிருந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றேன். விஞ்ஞானபூர்வமாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மருத்துவ துறையில் உள்ள துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின்படி முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளனர். எனவே, அரசியல் ரீதியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதில்லை.

அதேவேளை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து செயற்பட்டாலும் ஆன்மீகம்மீதும் நம்பிக்கை உள்ளது. வைரஸ் பரவலில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க சர்வ மத தலைவர்களும் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.  நேரம் இருக்கும்போது அதற்கும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றேன்.

இந்நிலையில் புனிதநீர் அடங்கிய மண் குடத்தை நான் ஆற்றில் போட்டது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகின்றது. பவித்ரா கடலில் மூழ்கிவிட்டார் என்றெல்லாம் கூறப்படுகின்றது. பரவாயில்ல, நான் கடலில் மூழ்கினால் கொரோனா ஒழியுமெனில் அதனையும் செய்வதற்கு தயார். (சிரிக்கிறார்) ” – என்றார்.

Related Articles

Latest Articles