‘கொரோனா’ 4ஆவது கட்டத்துக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும்

” இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நான்காவது கட்டத்துக்குள் சென்றுவிட்டால் அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் பொறுப்புடனும், பொதுநலன்கருதியும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாழவேண்டும்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது மட்டத்திலேயே இலங்கை தற்போது இருக்கின்றது. அதாவது வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றோம்.ஆனால் 4ஆவது கட்டத்துக்கு சென்றுவிட்டால் எல்லாம் கைமீறி சென்றுவிடும். உலக சுகாதார அமைப்பு 7 கட்டங்களை பட்டியலிட்டுள்ளது, இருந்தாலும் 4 ஆவது கட்டத்துக்கு வந்துவிட்டாலே பெரும் சவால்தான்.

எனவே, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி (இரண்டு மீற்றர்) , கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். 4ஆவது கட்டத்துக்கு செல்லாமல் இருப்பதற்கு வேறு மந்திரங்கள் எதுவும் இல்லை. மேற்படி நடைமுறைகளையே பின்பற்றவேண்டும். அத்துடன், களியாட்டம் உட்பட சட்டத்தால் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள விடயங்களில் பங்கேற்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தற்போது கொரோனாவுடன் வாழ தொடங்கிவிட்டன. இத்தாலி கிறிஸ்மஸ் பண்டிகைக்குகூட தயாராகின்றது. நாமும் சுகாதார பழக்கவழக்கங்களுடன் முன்னோக்கி பயணிக்கவேண்டும்.

அதேவேளை, வீடுகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உரிய வகையில் மருந்துகளை எடுக்காமையும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, உரிய தரப்புகளுக்கு அறிவித்து மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள். வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சம் கொள்ளவேண்டாம். சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாருங்கள். சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலை கட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles