கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன.

இதனை முன்னிட்டு இன்று விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்படுவதால் இந்த விசேட போக்குவரத்துத திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புனித அந்தோனியார் மாவத்தை – ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம் முதல் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி வாகனங்கள் உட்செல்ல மற்றும் வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராமநாதன் மாவத்தை – ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி வாகனங்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிறிஸ்டி பெரேரா மாவத்தை – ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வாகன சாரதிகள் மாற்று வீதிகளின் ஊடாக தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் வாகனங்கள் ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, சங்கமித்தா மகா வித்தியாலய மாவத்தை ஊடாக புறக்கோட்டை நோக்கி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புறக்கோட்டையிலிருந்து ஹெட்டியாவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள், ரெக்லமேஷன் வீதி, சைனா தெரு, ஐந்துலாம்பு சந்தி சுற்றுவட்டம், ஆட்டுப்பட்டித் தெரு, மகா வித்தியாலய மாவத்தை, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை ஊடாக ஹெட்டியாவத்தை நோக்கி பயணிக்க முடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் இன்று (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles