சஜித்தின் ஆட்சியில் 48 மணி நேரத்திற்குள் மலையகத்திற்கான ஜனாதிபதி செயலணி- மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணி தூங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியல்ல , மலையக மக்கள் நலனுக்காக என்றும் விழித்தெழுந்து சேவை செய்யும் கட்சி என்பதை எமது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மூலமாக நிருபித்து உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்கள் நலன் பேணும் வகையில்48 மணித்தியாலயத்தில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவிக்கின்றார்.

பதுளை தபாலகக் கட்டிடத் தொகுதியின் கேட்போர் கூடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராகவும், பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளராகவும் சமூக சேவையாளரும், வர்த்தகருமான பகி பாலச்சந்திரனை அறிமுகம் செய்து நியமனம் வழங்கும் பொது கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்; எமது கூட்டணிக்குள் எட்டப்பட்ட புரிந்துணர்விற்கு அமைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் மலையக மக்கள் முன்னணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் எமது கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இன்று எமது கட்சியில் இல்லை.
இவ்வருடம் தேர்தல் வருடமாகும். தேர்தல் கலண்டர் படி முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். யார் ஜனாதிபதியாக தெரிவானாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் எமது கூட்டணி சார்பாக போட்டியிடவுள்ள மண்ணின் மைந்தனான பகிரதனை வெற்றி பெற செய்யவேண்டும்.

இம்மாவட்டத்தில் நாங்கள் அரசியல் தலைமையை உருவாக்கியுள்ளோம். அதை நீங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் பணி செய்ய வயது ஒரு தடையல்ல. வயது என்பது இலக்கம் வாழ்க்கை என்பது இயக்கம் இதை மனதிற் கொண்டு நேர்மை,துணிச்சல், தூரநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் நாம் சாதிக்க முடியும். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் போட்டியிட்டு நாம் 4 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளோம். இவ்வாக்குகள் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாக அமையும். எதிர்வரும் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.

எமது ஆட்சியில் உருவாக்கப்படவுள்ள மலையகத்திற்கான செயலணி மூலம் பெருந்தோட்ட மக்களை தொழில் முனைவர்களாவும், சிறுதோட்ட உரிமையாளர்களாவும் மாற்றத் தேவையான துரித நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். எம் மக்கள் என்றும் தினக்கூலிகளாக இருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை தன்மானம், சுய கெளரவம் உள்ளவர்களாக நிச்சயம் மாற்றி காட்டுவோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்கள் அங்கம் வகித்து 40 வருட ஆட்சியில் அமைச்சு பதவிகளை வகித்த மலையக அரசியல் தலைமைகள் செய்யாதவற்றை செய்து காட்டினோம்.
சொந்த காணி, தனிவீடு, மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி, நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கம் என்பவை அவற்றுள் சிலவாகும்.

எனினும் எம் மக்கள் இன்றும் கல்வி, வாழ்விடக் காணி , வாழ்வாதாரக் காணி, பொருளாதாரம் என்பவற்றில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவற்றை தீர்ப்பதற்கு எம்மிடம் தூரநோக்குடன் கூடிய வேலைத் திட்டம் உள்ளது.

எமது பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் பலம் அவசியம் பதுளை மாவட்டத்தில் பகி பாலச்சந்திரனை வெற்றி பெற செய்து எமக்கு அங்கீகாரம் தாருங்கள். பகியின் அரசியல் பிரவேசம் சிலருக்கு பகீர் எனும் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றுமையாக இருந்து சாதித்துக் காட்டுவோம் என்றார்.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles