சஜித்தின் தேர்தல் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்தது சுதந்திரக்கட்சி

” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுவதைப் போல அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகிவிட முடியாது. அதேபோன்று அவர் கோருவதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது. எனவே, ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வீதிக்கிறங்கி போராடுவது பிரயோசனமற்றது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டஉப தலைவர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாநாட்டில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

” கடந்த வாரம் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரினார். அவ்வாறு செய்ய முடியாது. அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகவும் முடியாது,

அவருக்கு இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலிருந்து தெளிவுபடுத்த வேண்டும். ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த அவரது பதவி காலத்திற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே டிகிரி பண்டார விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

எனவே ஜனாதிபதியொருவர் அவரது பதவிக் காலத்தில் உயிரிழந்தாலோ அல்லது தானாக பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலோ பாராளுமன்றத்தின் ஊடாகவே அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். அதனை விடுத்து தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வீதிக்கிறங்கி போராடுவது பிரயோசனமற்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles