ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணியாக செயற்படுவதற்கு தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ருவான், அதனை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (30) முற்பகல் கண்டிக்கு பயணம் மேற்கொண்ட அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
” ஐக்கிய தேசியக் கட்சிக்கு இளம் தலைவரொருவர் தேவை என்று மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதனை ஏற்று தலைமைப்பதவிக்கு நானும் போட்டியிடுகின்றேன்.
அடுத்தவாரம் கட்சியின் செயற்குழு கூடும்போது இறுதி முடிவெடுக்கப்படும். கலந்துரையாடல்மூலம் புதிய தலைவரை தெரிவுசெய்யமுடியாமல்போகும் பட்சத்தில் வாக்கெடுப்புமூலம் தேர்வு இடம்பெறும்.” – என்றார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரா என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ருவான் விஜேவர்தன,
” ஆம். ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்தவர்கள்தான் இன்று அந்த பக்கம் இருக்கின்றனர். எனவே, கூட்டணியாக இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. பேச்சு நடத்தி , உரிய வகையில் பயணத்தை மேற்கொள்ளலாம்.” – என்றார்