ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரி பங்கேற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 64 ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சமாதியில் நினைவுகூரல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் பண்டாரநாயக்கவின் ஜனன தினம், சிரார்த்த தினம் என்பன சந்திரிக்கா தலைமையிலும், மைத்திரி தலைமையிலும் இரு அணிகளாக நிகழ்வுகள் நடத்தப்பட்டுவந்தன.
இந்நிலையில் இம்முறை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு அணியாக நிகழ்வை நடத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிகழ்வில் பங்கேற்கவில்லை.