சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

“ நிகழ்நிலைக் காப்புச்சட்டம் உயர்நீதிமன்ற பரிந்துரைக்கு புறம்பாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

“ ஏதேனும் சட்டமூலம் அல்லது ஏதேனும் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணாக உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்மானிக்கப்பட்டிருந்தால் அல்லது தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுமிடத்து அத்தகைய சட்டமூலம் அல்லது அத்தகைய ஏற்பாடு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு – பரிந்துரைக்கு அமையவே நிறைவேற்றப்பட வேண்டும்.

நிகழ்நிலை காப்பு சட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் 9 சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக தமது சொந்த தேவையின் நிமித்தம் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டனர். அவ்வாறான குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஒப்புகொள்ளப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் இந்த சபையில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு நடக்க முடியாது.

சபாநாயகருக்கு சரியான அறிவுரைகளை வழங்குவது அதிகாரிகளினதும் பொறுப்பாகும். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும். எனவே இந்த குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles