சம்பளத்தை கூட்டச் சொன்னால் குறைக்க முயற்சி செய்கின்றனர் – சபையில் உதயா எம்பி

ஒரு பக்கம் சம்பள உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அவர் 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாப பெற்றுக் கொடுக்க முடியாத சம்பள உயர்வு சம்பள நிர்ணய சபையால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஆனால் சிலர் சம்பள உயர்வு வழங்கப்பட்டதற்கு நாம் எதிர்ப்பு என தவறாக கருத்து கூறி வருவதாகவும் உண்மையில் தொழிலாளர்களின் வேலை நாட்கள் 13 ஆக குறைப்பதற்கு நாம் முழுமையான எதிர்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்தம் 25,000 ரூபா சம்பளம் பெற நாம் போராட வேண்டியுள்ளது எனக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மேலும் கூறுகையில்,

இவ்வளவு காலமும் இழுபறியாக இருந்து வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடையம் நேற்றையதினம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் யதார்த்தத்தை எடுத்துப் பார்த்தால் மேலும் இந்த பிரச்சினை இழுத்தடிப்பு செய்யப்படும் என்று தெரிகிறது.

சம்பள உயர்வு என்ற ஒன்றை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளமுடியாது அதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறவேண்டிய தொழில் உரிமைகள் தொழில்ரீதியான சலுகைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே.,,

நேற்று நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமான சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரளவ சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டாலும்
அது தொழிலாளர்களுக்கு சாதகமான சம்பளம் அல்ல.

சம்பள நிர்ணய சபைக்கு இவ்விடயம் எடுத்துச் செல்லப்பட்டு 900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் மொத்தம் 1040 ரூபா என்ற சம்பள உயர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் 13 நாட்களே தொழில் வழங்க முடியும் என கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

காரணம் ஒரு பக்கம் சம்பளத்தை உயர்த்தி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்துள்ளமை எந்த வகையிலும் தொழிலாளர்களின் மாதாந்த வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

எனவே இந்த சம்பள நிர்ணய சபையின் 1040 ரூபா நாளாந்த சம்பளத்தில் 13 நாட்கள் வேலை செய்தால் 13520 ரூபா சம்பளமே கிடைக்கும்.

1000 ஆயிரம் அடிப்படை நாள் சம்பளம் என்ற ரீதியில் மாதாந்தம் 25000 ரூபா கிடைக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது ஆனால் தற்போது அதிகரிப்புக்கு பதிலாக சம்பள குறைப்பே எற்ப்பட்டுள்ளது.

அத்தோடு நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடபடவில்லை.

ஆகவே புதிய முறையில் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. தொழிலாளர்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர்.

அரசாங்கம் ஆயிரம் ரூபா எப்படியாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் தொழில் உரிமை, சலுகை, அவர்களின் இருப்பு என்பவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

கூட்டு ஒப்பந்தம் என்று கூறிக் கொண்டு சுமார் 20 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களால் 700 ரூபா அடிப்படை சம்பளத்தை ஒரு ரூபாவிற்கு கூட அதிகரிக்க முடியவில்லை. ஆனால் தொழில் அமைச்சர் தலையிட்டு 25 ரூபா சம்பள உயர்வுடன் கம்பனிகள் 725 ரூபா அடிப்படை நாள் சம்பளம் மட்டுமே வழங்க முன்வந்தனர்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு உள்ளது என்ற ஒரு உண்மை இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் தொழிலாளர்களின் தொழில் உரிமை இதுவரை காலமும் அவர்கள் பெற்றுவந்த தொழில்சார் சலுகைகள் என்பவற்றை உறுதி செய்ய புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் பூரண ஆதரவை வழங்க தயார்.

Related Articles

Latest Articles