சர்வதேச விசாரணைகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

அரசின் காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று தீக்கிரையாக்கப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு அரசின் காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உறவுகள் குறித்த அலுவலகத்தைத் தாம் நிராகரிப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தலையீட்டின் மூலமே காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்தும் குறித்த கடிதங்களைக் கிழித்து அதனைத் தீக்கிரையாக்கினர்.

“இன்னும் காலம் தாழ்த்தாது கையில் ஒப்படைத்த எமது பிள்ளைகளே எமக்கு வேண்டும்” என்று கடிதங்களைத் தீக்கிரையாக்கிய தாய்மார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles