மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

மே தினம் தொடர்பாக இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள காலாவதியான அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த அவர், தற்போதைய அரசியல் சூதாட்டங்களிலிருந்து விலகி, கொள்கை அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட நடுத்தரப் பாதையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் எமது வேலைத்திட்டத்தில் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், முற்போக்கு சிந்தனை கொண்ட அனைத்து மக்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் அழைப்பு விடுக்கின்றேன்.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பாரிய மே தினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கில் திரண்டு ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles