மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஓச்சோவா, 2026 FIFA உலகக்கோப்பைத் தொடரே தனது கடைசித் தொடராக இருக்கும் என முன்னரே கூறியிருந்தார்.
இருப்பினும், அவர் தனது விளையாட்டு வாழ்க்கையை நீட்டிப்பதற்காக ஏதேனும் புதிய கிளப் அணியில் இணைவாரா என்ற ஊகங்கள் எழுந்தன.
செவ்வாய்க்கிழமை வெளியான தனது அறிவிப்பின் மூலம் அந்த விகாரங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“நான் எனது முழு உழைப்பையும் கொடுத்தேன்; எனது கிளப் அணிகளுக்காகவும் தேசிய அணிக்காகவும் களத்தில் அனைத்தையும் வழங்கிவிட்டேன், இன்று எனது கையுறைகளைக் கழற்றி வைத்து ஓய்வு பெறுகிறேன்.
ஒரு கோல்கீப்பராக இருப்பது என்பது, எல்லாமே உங்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு தருணத்திற்காக 90 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பதை உணர்வதாகும். அந்தத் தருணம் வரும்போது, நீங்கள் ஒரு நொடி கூட தயங்கக் கூடாது,” என்று பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பைத் தொடர்களில் 6 முறை இடம்பெற்ற மெக்சிகோ அணியில் ஓச்சோவா அங்கம் வகித்துள்ளார். இச்சாதனையை கால்பந்து உலகின் மகத்தான வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
