அட்டுளுகம பகுதியில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக அறிய வருகிறது.
இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேக எழுந்துள்ள நிலையில் நேற்று அவரது குடும்பத்துடன் தொடர்புள்ள இருவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது வரை 20 ற்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி காலை வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற ஒன்பது வயது சிறுமியின் சடலம் 28ஆம் திகதி மாலை பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இவர் அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மொஹமட் அக்ரம் பாத்திமா ஆயிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
4பேர் உள்ள குடும்பத்தில் இவர் இரண்டாவது குழந்தையாகும். கடைக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ள இவர், பின்னர் காணாமல் போனார்.இவர் கடைக்குள் நுழைந்து வெளியேறும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தன, ஆனால் அதற்கு மேல் அவளுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.பாத்திமா ஆயிஷாவின் தந்தை முகமது அமீன் சம்பவ தினம் வீட்டை விட்டு வெளியேறி மதியம் தான் வீடு திரும்பியுள்ளார்.
குழந்தை வீடு திரும்பாத நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுமியை தேடியும் கிடைக்காத நிலையில் அன்று மாலை 5 மணியளவில் சிறுமியின் தாயார் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
300 ரூபாவுக்கு 250 கிராம் கோழிக்கறியை வாங்கிக் கொண்டு பாத்திமா கடையை விட்டு வெளியேறியதாகவும், அட்டுலுகம பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக அவரை பிரதேசவாசிகள் பார்த்ததாகவும் கடையின் ஊழியர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அந்த இடத்தின் தெற்கே உள்ள வீதியில் அவரது வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்குச் செல்லும் பாதை வெறிச்சோடிக்காணப்படுவதோடு காடுகளால் மூடப்பட்டுள்ளது.
கிராம மக்களுடன் இணைந்து பல பொலிஸ் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, வீதியின் சதுப்பு நிலப்பகுதியில் சிறுமியின் உடல் சேற்றில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரின் சடலத்தின் மேல் மண் இடப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பதில் நீதவான் இந்திராணி உடவத்த சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார். சடலத்தை பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரால் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அவரின் பிரேத பரிசோதனை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் 20 ற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இறைச்சிக்கடைக்கும் அவரின் வீட்டுக்கும் இடையில் 150 மீட்டர் பகுதியில் வைத்தே ஏதாவது நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வேறு இடத்தில் அவரை கொலை செய்து இங்கு புதைத்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
மரண பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.










