” சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள மேலும் 2 மில்லியன் சினோ பாம் தடுப்பூசிகள் ஜுன் 2 ஆம் வாரமளவில் நாட்டை வந்தடையும். இதனை இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.” – என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்துள்ள மேலும் 5 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நேற்று (26) அதிகாலை வந்தடைந்தன. சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தலைமையிலான இலங்கைக் குழுவினரிடம், மேற்படி தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத்தூதுவர் கையளித்தார். சீனாவிடமிருந்து இதுவரை இலங்கைக்கு அன்பளிப்பாக 11 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ள 5 லட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு ஏற்றும் பணி நாளை முதல் (இன்று முதல்) ஆரம்பமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சீனாவிடமிருந்து 2 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்ய ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் அவை இன்னும் ஒரு மாதத்துக்குள் கிடைக்கப்பெறும் என சீனத் தூதுவர் உறுதியளித்தார். இதன்படிஜுன் 2ஆம் வாரமளவில் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சீனாவுடன் இணைந்து அந்நாட்டின் அனுசரணையுடன் – கூட்டு முயற்சியாக ‘சைனோ வெக்’ என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெற்றுவருகின்றன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.