பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரரான முஹம்மத் ஸீஷான் அலி, சீனாவின் ஷென்சோ-24 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று வரலாறு படைத்துள்ளார்.
40 வயதான ஸீஷான் அலி, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததன் மூலம், அந்த நிலையத்துக்குச் சென்ற முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியூகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து நேற்று (25) காலை ஷென்சோ-24 விண்கலம் ஏவப்பட்டது. இதில் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ, வூ யி ஆகியோருடன் ஸீஷான் அலியும் பயணித்தார்.
இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவர் தியான்கொங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஐந்து முதல் பத்து நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விண்வெளிப் பயணத்துக்காக ஸீஷான் அலி சீனாவில் ஏழு மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். சீன மொழிப் பயிற்சியும் இதில் உள்ளடங்கியிருந்தது.
இந்தச் சாதனை பாகிஸ்தானில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே பாகிஸ்தான் விண்வெளி ஆய்வு நிறுவனமான SUPARCO தலைமையகத்தில் ஒன்றுகூடி விண்கலம் ஏவப்படுவதை நேரலையில் பார்வையிட்டனர்.










