சீன கப்பலை அனுமதித்து இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்! அரசுக்கு ராதா அறிவுரை

சீனக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு சீனாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாதென இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதால் பூகோள ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென தெரிவித்துள்ள அவர், அந்த கப்பல் வருவதை தாமதப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சபையில் கேட்டுக் கொண்டார்.

இந்தியா எமக்கு எப்போதும் உதவும் நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மைய பொருளாதார நெருக்கடி நிலையில் நான்கு பில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு உதவியுள்ளது என்பதையும் மறக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மிகவும் சிறப்பானது. எனினும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வியே எழுகின்றது. அவ்வாறு அதனை நடைமுறைப்படுத்தினால் நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

யாரால் அவர் ஜனாதிபதியாக வர முடிந்ததோ அவர்களுக்கு எதிராக அவர் செயற்பட்டு அவர்களை கைது செய்வதன் மூலம் அவர் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமை அமைப்புகளினது எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.அந்த விடயத்தில் அவரை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் எழுகின்றன.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி என்ற வகையில் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். எமக்கு அமைச்சு பதவிகள் அவசியமில்லை.

மலையக மக்கள் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் ஆறு பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பெருமளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் மற்றும் நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர சபைகளை மாநகர சபைகளாகவும் பிரதேச சபைகளை நகர சபைகளாகவும் மாற்றும் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மலையகத்தில் ஹட்டன் நகர சபை உட்பட பல நகர சபைகள், பிரதேச சபைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றோம். அது தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles