சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி

கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்றதன் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளின் போது வெறுக்கத்தக்க ஆத்திரமூட்டல்களில் ரஷ்யா ஈடுபடலாம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் அச்சம் காரணமாக பொது சுதந்திர தின கொண்டாட்டங்களையும் உக்ரைன் அரசு இரத்துச் செய்திருந்தது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீடியோ உரையில் நேற்று பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டொனெட்ஸ்கிற்கு மேற்கே 145 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரமான சாப்லைனில் ஒரு ரயில் ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறினார். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறான அட்டூழியங்களுக்கு ரஷ்யா பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவிவித்தார்.

பயணிகள் ரயிலை இலக்குவைத்து ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகவும், இதனால் ரயில் தீப்பற்றி எரிந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை. ரஷ்யப் படைகளால் பொதுமக்கள் இலக்குவைக்கபடுவதில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, 22 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் நிரம்பியிருந்த ரயில் மீத ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியமையானது பெரும் அட்டூழியமாகும். இவ்வாறான குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக் கூறச் செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளின்கன் கூறினார்.

Related Articles

Latest Articles