பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர், சுயாதீன அணிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடிவருகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு தயாராகிவரும் ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது அதற்கான ஆவணத்தில் கையொப்பம் திரட்டிவருகின்றது.
அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்படாததால், ஆதரவு வழங்கும் முடிவை எடுக்கவில்லை என சுதந்திரக்கட்சி உட்பட சுயாதீன அணிகள் அறிவித்தனன. பிரதமர் பதவி விலகி சர்வக்கட்சி அரசு அமைக்க இடமளிக்காவிட்டால், தாமும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தயார் எனவும் குறிப்பிட்டின.
இந்நிலையிலேயே பிரேரணையின் உள்ளடக்கங்கள் பற்றியும், எதிரணிகளின் யோசனைகளையும் உள்வாங்கும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.