இலங்கைக்கு சுற்றுலாவந்திருந்த ஆஸ்திரேலிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் சந்தேகநபர், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து தமது குடும்பத்தார் சகிதம் வருகை தந்திருந்த பெண்ணொருவர் கம்பளை, வெலம்பொட, வலகெதர பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த 6 ஆம் திகதி தங்கியுள்ளனர்.
இதன்போது தமக்கு மசாஜ் செய்வதற்கு அத்துறை சார்ந்த ஒருவரை பெற்றுக்கொடுக்குமாறு விடுதி உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதன்பிரகாரம் ஒன்லைன்மூலம் வாதுவ பகுதியில் இருந்து நபர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இவரே மசாஜ் செய்யும்போது தவறான தொடுகைகளை செய்துள்ளார், இதனையடுத்து பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நுவரெலியாவுக்கு சென்ற அப்பெண் சம்பவம் தொடர்பில் இங்குள்ள பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸார், வெலம்பொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அத்துமீறி நடத்தார் எனக் கூறப்படும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாக வைத்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து , இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை நிருபர்