சூடுபிடிக்கிறது அரசியல் களம்: அநுர – சஜித் நேரடி விவாதத்தில் பங்கேற்பு

அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி விடுத்த சவாலை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.

பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சியின் பொருளாதார பேரவை உறுப்பினர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் விவாதத்துக்கு வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக சவால் விடுத்திருந்தது.

சுமார் 7 தடவைகள் இவ்வாறு சவால் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சவால் தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி,

“ குறித்த சவாலை நாம் ஏற்கின்றோம். கொள்கைகள் பற்றி விவாதிப்பது நல்லது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, குறித்த விவாதம் சிறப்பாக அமைய வேண்டுமெனில் அங்கும் இங்கும் கூவித்திரியாமல் எமக்கு அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தவும். சஜித் பிரேமதாசவுடன் விவாதிக்க எமது கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தயார்.
ஜனாதிபதி தேர்தலில் இவர்கள்தான் போட்டியிடுகின்றனர். எனவே, தலைவர்கள் ஊடாகவே பொருளாதாரத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வது நல்லது. எமக்கு அழைப்பு விடுப்பவர்கள் இன்று ஒரு கட்சியிலும் நாளை வேறொரு கட்சியிலும் இருக்ககூடும். எனவே,

தலைவர்களுக்கிடையிலான விவாதம்தான் சிறந்தது. அது சஜித்துக்கு முடியாவிட்டால் எமக்கு தெரியப்படுத்தட்டும். அடுத்தக்கட்டம் பற்றி அதன்பிறகு ஆராய்வோம்.” – என்றார்.

இதற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் நளின் பண்டார கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையுடன்தான் விவாதம் கோரி இருந்தேன். இந்நிலையில் அதற்கு பதில் சவாலொன்றை சுனில் ஹந்துனெத்தி விடுத்துள்ளார். சவாலை ஏற்காமல், அதற்கு மறு சவால் விடுவது தப்புவதற்கான வழிமுறையாகும். எமது பொருளாதார பேரவை போல் அநுரவுக்கு சவால் விடுப்பதற்கு எமது கட்சி தலைவரும் தயார். அவர் ஓடி ஒளியமாட்டார்.” – என்றார்.

Related Articles

Latest Articles