நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் அதீத வெப்பம், சூரிய புயல் மற்றும் சூரிய துகள்கள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கிலேயே குறித்த விண்கலம் அனுப்பட்டிருந்தது.
குறித்த விண்கலம் மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. இந்த வேகத்தை அடைந்ததன் மூலம் மனிதர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிக வேகமான பொருள் என்ற சாதனையை இந்த விண்கலம் படைத்தது.
விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள கவசமானது 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பார்க்கர் விண்கலம் தற்போது சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் வரை பார்க்கர் விண்கலம் சென்றுள்ளது.
விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.