” கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பது தொடர்பான சூழ்ச்சி திட்டத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பலப்படுத்துவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்காகத்தான் கோட்டாபய ராஜபக்சவை நாம் ஆட்சிக்கு கொண்டுவந்தோம். எனினும், அவரால் ஆட்சியை நிர்வகிக்க முடியாமல்போய்விட்டது. இதுவிடயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெளிப்படுத்துவோம். இவை தொடர்பான தகவல்கள் அரச இரகசிய தகவல் பெட்டியில் உள்ளது .
மஹிந்த ராஜபக்சவை எப்படி விரட்டினார்கள், அதன் பின்னணியில் செயற்பட்டது யார், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அது பற்றி நாம் கதைப்போம். மஹிந்த ராஜபக்சவை விரட்டியதன் விளைவையே தற்போது மக்கள் அனுபவிக்கின்றனர்.” – என்றார்.










