” ஜனாதிபதியும் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்” – புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஏற்பாடு!

” புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்று.

இந்நிலையில் இச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர்,

” புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கான, சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு புதிய சட்டத்தின் பிரகாரம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையைக்கருதி ஓய்வுபெற்றவர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால் சேவைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டுவந்தது. எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles