ஜனாதிபதி தேர்தல் குறித்து முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவு

மலையகத் தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய தேர்தல் ஆவணத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்துவதெனவும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இதில் முன்னுரிமையளிப்பதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கூடியது. பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. எதிர்வரும் 8 ஆம் திகதி உதயமாகவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்குரிய உத்தரவாதத்தை பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் முன்னுரிமை அடிப்படையில் பேச்சு நடத்துவதற்கும், தேவையேற்படின் ஏனைய பிரதான வேட்பாளர்களை சந்திப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles