“ ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை. தேர்தல் நடத்தும் முறைமைக்கு அமைய இது சாத்தியமில்லை.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே குறித்த அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ ஜனாதிபதி தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரேயொரு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். எனினும், பொதுத்தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்தி அதில் வாக்களிப்பது குறித்து நாட்டிலுள்ள வாக்காளர்களுக்கு சரியான தெளிவுபடுத்தல் இல்லாமை இதன் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால் சிக்கல் நிலை உருவாகும்.” – எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தற்போது ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது.
இதுவரை எந்தக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கவில்லை.” – எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.