ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர்.

அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும்.

 

இராஜாங்க அமைச்சர் ஜீவன்

ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது தம் பணியை தொடரும் என்பதையும் இத்தைப்பொங்கல் பெருநாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒட்டுமொத்தமாக எமது கட்டுகோப்பை பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள், இதர வரப்பிரசாதங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவதற்கு இந்நன்நாளில் நாம் திடசங்கற்பம் எடுத்துக்கொள்வோம்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இப்பொங்கல் தினத்தில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும். இத்தருணத்தில் அனைத்து மக்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மனோ கணேசன் எம்.பி.

செந்தில் தொண்டமான்

தமிழர்களின் தமிழினப் பண்பாட்டு அடையாளங்களை உலகளவில் எடுத்துரைக்கும் தைப்பொங்கல் பெருநாளன்றில், எம்மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும் தம்மோடு தோழமையாக நின்று மண்ணை பண்படுத்தி, பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக அமைந்துள்ள தைத்திருநாள், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றைக் கருத்தோடு நின்று மகிழும் பெருவிழாவாகும்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’ என்கிறது நன்னூல் நூற்பா. அதன்படி, தமிழர்கள் அனைவரும் ‘காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு, இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடும், முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடும் வீரியத்தோடும் பயணிப்போமாக!

ஆயிரமாயிரம் வருடங்களுக்கு மேலாக, அன்று தொட்டு இன்றளவும் நம்மை அகமகிழச் செய்துவரும் பொன்னான பொங்கல் திருநாளில் பொங்கப்படும் புதுப்பானை சக்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் இனிய நாள், அனைவரது வாழ்விலும், சந்தோஷத்தையும் அமைதியையும் வாரி வழங்கட்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன்

காலங் காலமாக ஏமாற்றத்தை சந்தித்து வரும் மலையக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் இனிமையும் பொங்க வேண்டும் என மனம் குளிர்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சம்பள உயர்வு இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு பிறந்துள்ள தை மாதத்திலாவது வழி பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தனி வீட்டுத் திட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டு அவர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு கல்வியே கருந்தனம் என்பதை உணர்ந்து பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சொந்த முயற்சியில் தம்மை வளர்த்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் ஒவ்வொருவரும் பிறந்துள்ள புதிய ஆண்டில் திடசங்கற்பம் பூண வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Untitled-4.jpg
Paid Ad