பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ள சி.டி. விக்ரமரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
“ வாருங்கள் பொலிஸ்மா அதிபரே, நீங்கள் விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிந்தேன். என்ன நடக்க வேண்டும்.” – என ஜனாதிபதி இதன்போது கேட்டுள்ளார்.
“ சேர் எனக்கு எதுவும் வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் எண்ணம்போல் செயற்படலாம்.” -என்று பொலிஸ்மா அதிபர் பதிலளித்துள்ளார்.
“ பொலிஸ்மா அதிபர் போன்ற முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், தமது பதவிகாலத்தை தற்காலிகமாக நீடித்துக்கொள்ளவே முற்படுவார்கள். அது தொடர்பில் அரச தலைவர்களுக்கு அழைப்புகள் வருவதும் வழமை. ஆனால் நீங்கள் அப்படி முயற்சிக்கவில்லைபோலும். எந்த அரசியல்வாதியும் என்னை தொடர்புகொள்ளவில்லையே…” என ஜனாதிபதி சிரித்தபடியே கூறியுள்ளார்.
“ சேர், பதவி என்பது நிரந்தரமில்லை. விடைபெறும்போது மகிழ்ச்சியாக செல்ல வேண்டும். இலங்கையில் சுமார் 25 வீதமான பகுதிகளுக்கே நான் சென்றுள்ளேன். எஞ்சிய பகுதிகளுக்கும் மனைவியுடன் சென்று, மீதமுள்ள காலத்தை இன்பமாக கழிக்கவே விரும்புகின்றேன். பதவி காலத்திலும் அரசமைப்பின் பிரகாரம் செயற்பட்ட ஆத்ம திருப்தி உள்ளது.” என்று பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பு முடிந்த பிறகு அங்கிருந்து பொலிஸ்மா அதிபர் விடைபெற்றார். அவ்வேளையில் தனது ஆலோசகர் ஒருவரிடம், “ பார்த்தீர்களா இந்த மனிதனின் பண்பை, இப்படியானவர்களே பாதுகாப்பு துறைக்கு வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டு, பொலிஸ்மா அதிபர் குறித்து பெருமிதம் அடைந்தாராம்.