ஜோசப் விடுவிக்கப்படும் வரை போராடுவோம் – ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

“பழிவாங்கும் நோக்குடன் கைதுசெய்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஜோசப் ஸ்டாலின் விடுவிக்கப்படும் வரைக்கும் நாடெங்கும் நாள்தோறும் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் இலங்கை மக்கள் ஆசிரியர் சங்கம் என்பன கூட்டாக மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளன.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்று மாலை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரின் கைதைக் கண்டித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

Related Articles

Latest Articles