ஜோர்தான் தலைநகர் அம்மானில் வியாழக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புப் பணிப்பகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் இலங்கைத் தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பொதுப் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர், ஒக்டோபர் 23ஆம் திகதி ஜோர்தானின் கராக் ஆளுநர் பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின்போது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின் கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அரிதான தாக்குதலாக இது கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய கத்திக்குத்துத் தாக்குதலுக்கும் தேவாலயத் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
தேவாலயத் தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்தான், சிரியாவில் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், பயங்கரவாதிகள் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா திங்கட்கிழமை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தூதரகப் பணியாளர்கள் மற்றும் ஜோர்தானில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மானிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் கோப்ரல் அல்-சலைத்தாவின் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கும், ஜோர்தான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இலங்கைத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் விஸ்வநாத் அப்பொன்சு மற்றும் தூதரக அதிகாரிகள், ஜோர்தான் அதிகாரிகளுடன் இணைந்து அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன், ஜோர்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.










