தெற்காசிய சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் இரத்தினபுரியைச் சேர்ந்த எம்.கவிந்து பிரசாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற டைக்குவாண்டோ போட்டியிலேயே அவர் இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரி – ஹிதல்லென்ன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.கவிந்து பிரசாத், பிளக் மாஸ்டர் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கை டைக்குவாண்டோ சம்மேளனம் மற்றும் சர்வதேச டைக்குவாண்டோ சம்மேளனம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த டைக்குவாண்டோ மனிதநேய மன்றத்தின் ஆசிய வலய கிளையுடன் இணைந்து இந்த போட்டி இம்மாதம் 6ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் 17 வயதிற்குட்பட்டோருக்கான டைக்குவாண்டோ போட்டியிலேயே எம்.கவிந்து பிரசாத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இரத்தினபுரி – பாம்கார்டன் பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த எம்.கவிந்து பிரசாத், ஹிதல்லென்ன தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரை கல்வி பயின்றுள்ளார்.
சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றுள்ள எம்.கவிந்து பிரசாத், உயர் தர கல்வியை தொடரவுள்ளார்.
கவிந்து பிரசாத்தின் தாய் வெளிநாட்டில் பணியாற்றி வருவதுடன், அவரது தந்தை லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எம்.கவிந்து பிரசாத், கடும் சிரமங்களுக்கு மத்தியில் இன்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது