மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தொலைபேசி ஊடாக தன்னிடம் உறுதியளித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் தோட்ட அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நீலகாமம், டெல்மார், உடபுசல்லாவை, மஸ்கெலியா உள்ளிட்ட தோட்டங்களில் கடந்த இரு வார காலப்பகுதிக்குள் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளி ஒருவரின் வீட்டை கறுப்பு ஆடை கும்பல் அடித்து நொறுக்கியது.
இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது,
பொலிஸ்மா அதிபர், தோட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்புடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதன்கிழமை மேற்படி சந்திப்பு நடைபெறும் என மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
அதேவேளை, நீலகாமம் தோட்டம், டெல்மார் தோட்டம் போன்ற பிரச்சினைகளை நாம் மலையகம் அமைப்பினரே ஊடகங்கள் ஊடாக தேசிய மயப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
