இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கிம்புலா எலே குணா’ உட்பட 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் (25) நாளையும் (26) தமிழகம் செல்கிறது.
கிம்புலா எலே குணா என்ற சின்னையா குணசேகரன், அழகப்பெரும என அழைக்கப்படும் கோட்டா காமினி, சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அத்துருகிரியவைச் சேர்ந்த நளீன் சதுரங்க என்ற லடியா கெசல்வத்த தனுக, வல்லே சுரங்கா என்ற கமகே சுரங்கா பெர்னாண்டோ, புகுடிக்கண்ண என்ற சின்னையா திலீபன் (கிம்புலா எலே குணாவின் மகன்) புஷ்பராஜா மற்றும் மொஹமட் அஸ்மின் போன்ற பாதாள உலக குற்றவாளிகளை அழைத்து வருவதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தமிழகம் செல்கிறது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், இவர்களால் மேற்கொள்ளப்படும் பாதாள உலக செயற்பாடுகள், கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இவர்களுக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் இரகசியப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது.