கம்பளை நகரில் வைத்து தன்னை கத்தி முனையில் சிலர் கடத்திகொண்டு சென்றதாகவும் பின்னர் அட்டன் நகரில் வைத்து வேனின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்ததாகவும் கூறி கம்பளை ஹெட்காலை பொலிஸ் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்த பன்னிரண்டு வயது பாடசாலை மாணவன் வழங்கிய வாக்கு மூலம் பொய்யானது என விசாரணைகளை மேற்கொண்ட ஹெட்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
கடந்த 2 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் தனியார் வகுபிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயது மாணவன் தன்னை சிலர் வேனில் கடத்தி சென்றுண்டிருந்த போது ஹட்டன் நகரில் வைத்து வேனின் ஜன்னல் வழியாக பாய்ந்து தப்பித்து வந்ததாக கூறி இருந்தார்.
இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதியிடம் கூறியதையடுத்து குறித்த சாரதி அட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பொலிஸார் மாணவனின் பெற்றோரை அழைத்து சிறுவனை ஒப்படைத்திருந்தனர் .
இதையடுத்து அன்றைய தினம் இரவு 1 மணிக்கு கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவனை பொலிஸார் ஹெட்கால பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கம்பளை பகுதியிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் கவ்வி கற்றுவந்த உலப்பனை, உடகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று, தான் மேலதிக வகுப்பு முடிந்து கம்பளை- வீகுலவத்தை பாதை வழியாக பேருந்து நிறுத்தும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில் நின்ற மூன்று பேர் தன்னை மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.
அத்துடன், கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தும் இடத்தில் வைத்து , வீடு திரும்புவதற்காக நாவலப்பிட்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய சந்தர்ப்பத்தில் , முன்பு அவரை அச்சுறுத்திய மூன்று பேரில் ஒருவர் வந்து மாணவன் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கவிடாது கடத்தி கொண்டு சென்றதாகவும், கடதியவன் தோல் மீது கைபோட்டதன் பின்னர் தான் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் சுயநினைவு திரும்பியபோது, தான் ஒரு வேனுக்குள் இருப்பதை உணர்ந்ததாகவும், யாரும் இல்லாததால், வேனின் கதவைத் திறந்து வெளியேற முயன்றதாகவும், ஆனால் அது பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக தப்பிவந்தகதாகவும் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கி இருந்தார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட ஹெட்காலை பொலிஸார் உயரதிகாரிகளை கொண்ட மூன்று பொலிஸ் குழுக்களை அமைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு கட்டமாக கம்பளை முதல் நாவலப்பிட்டி நகர் வரை வீதிகளில் அமைந்திருந்த கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்த பொழுது ஓர் இடத்தில் கடத்தப்பட்டதாக கூறிய மாணவன் சக மாணவருடன் நடமாடுவதை அவதானித்து சந்தேகமடைந்து குறித்த கல்வி நிறுவனம் கூடச் சென்ற சக மாணவன் உட்பட பலரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்;டதில் சந்தேகம் எழவே மீண்டு மாணவனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சம்பவ தினம் தான் அட்டன் பஸ்சில் ஏறியதாகவும், பஸ்சில் நன்றாக தூங்கிவிட்டதால் அட்டன் நகரில் வைத்து விழித்தெழுந்த போது வீட்டுக்கு சென்றால் தந்தையிடம் அடிவாங்க நேரும் என் பயத்தின் காரணமாகவே கடத்தல் நாடகமாடியதாக பொலிஸார் கூறியுள்ளார்.
மேற்படி சிறுவனின் கடத்தல் நாடகத்தால் மூன்று பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 12 பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட 30 திற்கும் மேற்பட்ட பொலிஸார் மேற்படி விசாரணைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.