ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்குக் கொள்கைய ளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக் கட்சியின் யாழ்ப் பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் ஊடகங் களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயத்திலும் கரிசனைகளைக் கொண்டவர்களாகத் தம்மை வெளிப்படுத்தவில்லை.
ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்தவகையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன்.
எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சி யினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது. ஆகவே, இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதிக்கிடையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது. அதன் போதே தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தின்போது தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்தும் பேசவுள்ளோம்.” – என்றார்.










