தமிழ் பொதுவேட்பாளர் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

“தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும், அநேகமாக இந்த வாரத்துக்குள் தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்து விடுவோம்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல. இதில் ரணிலுக்கா என்று கூறுவது முற்றிலும் தவறானது. உண்மையில் எமது தமிழ் மக்களுக்காக அவர்களின் எதிர்காலத்துக்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்வில் பலருடைய பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரைத் தேர்வு செய்வதென்றால் மாறி மாறி குற்றச்சாட்டுகள் சொல்லி வருகின்ற நிலைமை உள்ளது.

அதிலும் ஏதாவது ஒருவிதத்தில் தான் நினைக்கின்ற ஒருவர்தான் தமிழ்ப் பொது வேட்பாளராக வர வேண்டுமென யோசிக்கின்றவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மிடுக்கோடு பேசுகின்றவர்களாக இருக்கின்ற நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சற்று தாமதமாகின்றது.

மேலும் இவர்கள் ஒருவரைச் சுட்டிக்காட்டி அவரை அழைத்தால் அவர் தான் வரமாட்டேன் எனக் கூறுகின்ற நிலைமையும் உள்ளது. உண்மையில் ஒருவரைத் தெரிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அநேகமாக இந்த வாரத்துக்குள் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து விடுவோம்.

இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தைக் கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை. இந்தியத் தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்குத் தெரியாது. என்னுடன் இப்படிப்பட்ட விடயங்களை அவர்கள் கதைப்பது குறைவு. ஏதாவது கலாசாரம், இலக்கியம், சமயம் ரீதியாகத்தான் என்னுடன் அவர்கள் கதைப்பார்கள். இப்படிப்பட்ட விடயங்கள. கதைப்பது குறைவு. அதனால் இதைப் பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால், சுமந்திரன்தான் இப்ப பெரிய சத்தம் எல்லாம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அதாவது தாங்கள் எப்படியாவது தமிழ்ப் பொது வேட்பாளர் நியமிப்பதை நிறுத்துவோம் என்றும், தங்களைத் துரோகி என்று சொன்னாலும் பயப்படமாட்டோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

இதனைவிடத் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறு அழுத்தங்கள் வரவில்லை. ஆனால், சிங்கள வேட்பாளர்களிடைய ஒருவிதமான அச்சமும் பயமும் அருவருப்பும் வந்திருப்பதாகத் தெரிகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles