நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கத்துக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது.
தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தயாசிறிக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுத்த கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற முடிவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல தயாசிறி ஜயசேகரவை சுதந்திரக்கட்சியின் செயலாளராக ஏற்பதாக அக்கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட – நீதிமன்றத்தால் தற்போது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தயாசிறி ஜயசேகரவை கட்சிலிருந்து இடைநிறுத்தும் முடிவை சுதந்திரக்கட்சியின் நிமல் தரப்பு எடுத்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தயாசிறி, மைத்திரி தரப்புகள் இணைய இணக்கத்துக்கு வந்துள்ளன எனக் கூறப்படுகின்றது.
