தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த நகர சபையின் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்து வந்த நிலையில் பதில் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் லட்சுமன் பாரதிதாசன் வகித்து வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் திரு மேனகா தலைமையில் காலை 10 மணியளவில் நகர சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் பிரசன்ன விதானகே அவர்கள் சந்தன பிரதீப் குணதிலக்கவின் பெயரை முன்மொழிந்தார். நகர சபை தலைவரின் பெயரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் முன்னாள் பதில் நகர சபை தலைவருமான லட்சுமன் பாரதிதாசன் வழிமொழிந்தார்.
அதனை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியில் நகரசபையில் 7 ஆசனங்கள் இருக்கும் நிலையில் 6 பேர் சந்தன பிரதீப் குணதிலகவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தாது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு இன்று முதல் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யின் சந்தன பிரதீப் குணதிலக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த நகரசபையில் எதிர்தரப்பில் இருக்கும் நான்கு பேர் புதிய தலைவரை தெரிவு தொடர்பில் நடுநிலைமை போக்கினை கடைப்பிடித்த தாக தெரிவித்தனர்.
கௌசல்யா










