திபெத்திய மக்களின் ஆன்மீக தலைவரும், திபெத்திய புத்த மதத்தின் உலகளாவிய தலைவருமான தலாய்லாமாவின் இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில், அவரது இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தலாய்லாமாவின் வருகைக்கு கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
” தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், திபெத் மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், அவர் கூறிக்கொள்வது போல் அவர் எளிமையான துறவி அல்லர். அவர் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தின் தலைவர். ஆன்மிக தலைவர் என்ற பெயரில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து, சீனாவுக்கு எதிரான பிரிவினை செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார். எனவே, இப்பிரச்சினையில் சீனா-இலங்கை இருதரப்பு உறவை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும். ” – எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.










