தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நேற்றிரவு (28) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தொகுதி வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றையதினத்தின் (29) பின்னர் இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கலாமென, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்றையதினம் (29) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது .
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கி.மீ. வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.