தீபாவளியால் ஹட்டன் டிப்போவுக்கு பண மழை: ஒரே நாளில் ரூ.47 லட்சத்துக்கு மேல் வசூல்!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்துச் சபை ஹட்டன் டிப்போ வரலாற்றில் ஒரே நாளில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றுள்ளதாக டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று 7ஆம் திகதி குறுந்தூர மற்றும் நீண்டதூர சேவைகளுக்காக 82 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதன்படி, 7ஆம் திகதி காலை முதல் 8ஆம் திகதி காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 47 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹட்டன் டிப்போவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடந்த 5ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, ஒரு பயணத்தில் சுமார் 2 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து சேவையை ஆரம்பித்த நாள் முதல் பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களைப் பதிவு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை குறுந்தூர மற்றும் நீண்டதூர சேவைகளுக்காக மேலதிக பேருந்துகளைத் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஹட்டன் டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles