இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழில் சார்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், தேயிலைத் தொழிற்சாலைகள், உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் உரங்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.
இது ஒரு ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் என்பதுடன், இதன் இரண்டாம் கட்டக் கலந்துரையாடல்களை இம்மாதத்திற்குள்ளேயே நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்பதற்கான விசேட அறிவுறுத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன வழங்கினார்.
அத்துடன், தேயிலைக் கைத்தொழிலை மேலும் உயர்த்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றைப் பிரதி அமைச்சர் முன்மொழிந்ததுடன், அவ்முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.










